Friday, December 13, 2019

ரத்த சொந்தத்தில் திருமணம்

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து, மகளிர் மற்றும் மகப்பேறு டாக்டர் இந்திரா நெடுமாறன்: நம் உருவம், நிறம், பாத அமைப்பு, இதயத் துடிப்பு, நகம் வளர்ச்சி உட்பட, நம் உடலை, 'குரோமோசோம்'கள் தான் முடிவு செய்கின்றன. எப்போது இறப்போம் என்பதையும், இவை தான் தீர்மானிக்கின்றன.நம் உடல், 'செல்'களால் ஆனது. அந்த செல்களின், 'நியூக்கிளியஸ்' உள்ளே இருக்கிறது, குரோமோசோம். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், 46 குரோமோசோம்கள் இருக்கும். 23 குரோமோசோம்கள் அப்பாவிடம் இருந்தும், 23 குரோமோசோம்கள் அம்மாவிடம் இருந்தும் வருகின்றன.அதனால் தான், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்களில் பெற்றோர் போலவே, குழந்தைகளும் உள்ளனர். அது போலத் தான், பெற்றோர் உடல் நலப் பிரச்னைகளும் குழந்தைகளுக்கு வருகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே, ஒரே மாதிரியான குரோமோசோம்கள் இருக்கும் என்பதால், அத்தகையோருக்கு பிறக்கும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக பிறக்க வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், நெருங்கிய சொந்தம் இன்றி, வெளியே இருந்து திருமணம் செய்வதால், புது வகையான குரோமோசோம்கள் இருக்கும்; குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதற்கான வாய்ப்பு குறைவு.தலைமுறை தலைமுறையாக சொந்தத்திலேயே திருமணம் செய்யும் போது, 'ஹீமோபீலியா, தாலசீமியா' போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். அடிபட்டு ரத்தம் வெளியாகும் போது, மூன்று நிமிடத்தில் ரத்தம் உறைய வேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்தால், ரத்தம் உறையும் தன்மையில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும், சொந்தத்தில் திருமணம் செய்யும் போது, ஒரே மாதிரியான மரபணுக்கள் தான் இருவருக்கும் இருக்கும். அதனால், மரபணு பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய் போன்றவை, இப்படித் தான் வழி வழியாக வருகின்றன. கண் பார்வை குறைபாடு, தசை நார்கள் பிரச்னை, உயர வளர்ச்சி குறைபாடு, பருவம் அடையாமல் இருப்பது, திருநங்கையாக பிறப்பது எல்லாமே, குரோமோசோம் பிரச்னை தான். அதுபோல, சொந்தத்தில் திருமணம் செய்வதால், 'இன்பார்ன் எரர் மெட்டபாலிசம்' பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளால், தாய்ப்பாலைக் கூட குடிக்க முடியாத பிரச்னை ஏற்படும். எனவே, அத்தை மகள் - மாமன் மகன் திருமணம் செய்யக் கூடாது. அதே நேரத்தில், சொந்தத்தில் திருமணம் செய்தாலும், சிலருக்கு பிரச்னை இல்லாமல், நல்ல குழந்தைகளாக பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம், மரபணுக்களில் குறைபாடு இல்லாமல் இருப்பது தான்!